ஆக்லாந்தில் நேற்று இரவு திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து துப்பாக்கி, பணம், போதைப்பொருள் மற்றும் வெடிமருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் Manurewa வில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக Counties Manukau மத்திய பகுதி கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஆடம் பைன் தெரிவித்தார்.

குறித்த நபர் பின்னர் ஒரு வாகனத்தில் ஏறி மற்றொரு நபருடன் அந்த பகுதியை விட்டு வெளியேறினார் என்று அவர் கூறினார்.

இருவரையும் பின்தொடர்ந்த பொலிஸார் அவர்களை எவ்வித அசம்பாவிதமும் இன்றி கைது செய்ததாக பைன் கூறினார்.

இதனையடுத்து அவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிமருந்துகள், பணம், மெத்தம்பேட்டமைன் மற்றும் கஞ்சாவுடன் ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 19 மற்றும் 24 வயதுடைய இருவர் மீதும் கொலை மிரட்டல், திருடுதல் மற்றும் போதைப்பொருள் விநியோகத்திற்காக வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் இன்று Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்