இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்குழு, ஜனாதிபதித் தேர்தல் 2024 பற்றிய முழுமையான சுயாதீனமான திட்டத்தை அறிவித்துள்ளது.

அத்துடன் எதிர்கால தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் தமது குழு முன்வைக்கும் என்று தெரிவித்துள்ளது.

குழுவின் பிரதான பார்வையாளரான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோர், ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைக்கும்போது, தமது கண்காணிப்பாளர்கள் சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

தமது கண்காணிப்பாளர்கள்,எந்த தூதரகங்களிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ உத்தரவுகளைப் பெறாமல், உண்மையான சுதந்திரமான மற்றும் வெளிப்படையான முறையில் செயல்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, தேர்தல் நிர்வாகத்தின் பணி, சட்ட கட்டமைப்பு மற்றும் பிரசாரத்தின் நடத்தை, ஊடகங்களின் பணி மற்றும் தேர்தல் செயல்பாட்டில் சமூக ஊடக வலைப்பின்னல்களின் பங்கு போன்ற தேர்தல் செயல்முறையின் பல்வேறு அம்சங்களை தமது குழு அவதானித்து பகுப்பாய்வு செய்யும்.

அத்துடன், இலங்கை கையொப்பமிட்டுள்ள தேசிய சட்டம் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்க தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை தமது கண்காணிப்பாளர்கள் மதிப்பீடு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழுவில் 26 நீண்டகால உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அதே நேரத்தில் 32 குறுகிய கால கண்காணிப்பாளர்கள்; தேர்தல் நாளில் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.