பங்களாதேஷில் கடந்த மாதம் நடந்த உள்நாட்டு கலவரத்தின் போது பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா மற்றும் அவரது நிர்வாகத்தில் உள்ள 6 முக்கிய பிரமுகர்கள் மீது குறித்த கொலை விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.

ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பிற மக்கள் மீது அந்நாட்டு  துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சயீத் என்ற ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

தனக்கும் சயீத்துக்கும் தொடர்பில்லை என்றும், வழக்கைத் தாக்கல் அவரது செய்ய குடும்பத்திடம் நிதி வசதி இல்லாததால் தானாக முன்வந்து நீதிமன்றத்தை அணுகியதாகவும் வழக்கறிஞ்சர் ஹம்சா கூறியுள்ளார்.

வன்முறையை அடக்குவதற்கு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹசீனா கூறியதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நான்கு உயர் அதிகாரிகள் ஆகியோரையும் நீதிமன்றம் சந்தேகநபர்களாக பெயரிட்டுள்ளது.

அவரது அரசாங்கம் பரந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பங்களாதேஷின் பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் கடந்த வாரம் அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.