நடிகர் சூரி, மலையாள நடிகை அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கொட்டுக்காளி’. ‘கூழாங்கல்’ வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஆக.23-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி சூரி கூறும்போது, “காமெடியனாக இருந்து கதையின் நாயகனாக மாறியிருக்கிறேன். அதுக்கு ரசிகர்கள்தான் காரணம். ஒரு நடிகனாக, ‘கொட்டுக்காளி’ எனக்கு சிறந்த கதைக்களம். இப்படியான படங்களிலும் நடிக்க வேண்டும் என்று நடித்திருக்கிறேன். பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். இது நம்மைச் சுற்றி, நம் நம்பிக்கையை சுற்றி நடக்கிற கதைதான். படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பாராட்டினார்” என்றார்.

இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் அன்னா பென் கூறும்போது, “மீனா என்கிற பிடிவாதக்காரப் பெண்ணின் குடும்பம் படுகிற போராட்டம்தான் இதன் கதை. இயக்குநர் கதையை சொல்லும்போது அனைத்துக் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்ததைப் பார்த்தேன். இதில் என் கேரக்டரின் பின்னணி நான் கேள்விப்படாத விஷயமாகவும் கதை எல்லோருக்கும் பொருந்துவதாகவும் இருந்தது.

இயல்பான பெண்ணாக நடித்திருக்கிறேன். எனக்கு அதிக வசனம் இருக்காது. பார்வை, உடல் மொழி மூலம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறேன். அது எனக்கே புதிதாகவும் சவாலானதாகவும் இருந்தது” என்றார்.