பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. 206 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் இந்த போட்டித் தொடரில் பங்கேற்றனர். இதில் பராகுவே நாட்டைச் சேர்ந்த லுவானா அலோன்சோ என்ற நீச்சல் வீராங்கனையும் பங்கேற்றார்.
ஆனால், இவர் மிகவும் அழகாக இருப்பதாகவும் அவரது அழகு காரணமாக அவரது அணியின் சக வீரர்கள் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவதாகவும், இதன் காரணமாக இவரை மீண்டும் அவரது நாட்டிற்கே திரும்பிச் செல்லுமாறு பராகுவே அணியின் மேலாளர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சோ ஒலிம்பிக்கில் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க தகுதி பெற இயலவில்லை. அவர் தோல்வியடைந்ததால் அவரால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கை பொறுத்தவரை வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஒலிம்பிக் தொடர் தொடங்கியது முதல் போட்டியின் கடைசிநாள் விழா வரை வீரர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், பராகுவே வீராங்கனை அலோன்சோ இறுதிப்போட்டிக்கு முன்னேறாத நிலையில், அவர் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறி நாடு திரும்புமாறு அவரது அணியின் மேலாளர் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து தங்கியிருப்புத அவரது நாட்டு வீரர்கள் மத்தியில் பாதிப்பையும், கவனச்சிதறலையும் ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம், அவர் சக வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அவரை ஒலிம்பிக் கிராமத்தைவிட்டு பராகுவே அணியின் மேலாளர் வெளியேறி சொந்த நாட்டிற்குத் திரும்புமாறு கூறியது உண்மை என்பதை மட்டும் ஆங்கில ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. ஆனால், அதற்கு அவர் அழகாக இருப்பதால் வீரர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதுதான் காரணமா? என்பதை உறுதி செய்யவில்லை. ஆனால், அவரது நடவடிக்கைகள் அணியின் சக வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அந்த அணி மேலாளர் கூறியிருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பராகுவே வீராங்கனை அலோன்சா நீச்சலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.