இந்தியா: தமிழ்நாடு

கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யாரென்றே தெரியாத கட்சிக்கு விவசாயி சின்னத்தை வழங்கி, எங்களது வளர்ச்சியை திட்டமிட்டுத் தடுக்க முற்படுகின்றனர்.

எந்த சின்னத்தை ஒதுக்கினாலும், நான் போட்டியிடுவேன். வெற்றி பெற்று அங்கீகாரம் பெறுவேன். அதேபோல, அனைத்துக் கட்சிகளும் தனித்து நின்று அங்கீகாரம் பெற்று, சின்னத்தைப் பெறுவார்களா? குறிப்பாக, தமிழகத்தில் பாஜகவால் தனித்து நின்று அங்கீகாரம் பெற முடியுமா?

தமிழகத்தில் 3 கூட்டணிகள் உள்ளன. நாங்கள் மட்டும்தான் தனி அணி. நான் தனியாக நின்று, 3 கூட்டணிகளையும் எதிர்ப்பேன். நாம் தமிழர் கட்சி 8 கோடி மக்களுடன் வலுவான கூட்டணி அமைத்துள்ளது.

பல மாநிலங்களில் 5, 7 கட்டங்களாக தேர்தலை நடத்துகின்றனர். ஆனால், தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துகிறார்கள். பாஜக வலிமை இல்லாத மாநிலங்களில்தான் தேர்தல் விரைவாக நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நாளை நடைபெறும் கட்சியின் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் அறிமுகத்துடன், கட்சி சின்னமும் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.