நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான கௌரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவியேற்றுள்ளார்.

 

நியூசிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதன் மூலம் ஜெசிந்தா ஆர்டன் 2-வது முறையாக பிரதமரானார்.

 

இந்த தேர்தலில் ஹாமில்டன் மேற்கு தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 33 வயதான மருத்துவர் கௌரவ் சர்மா தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 

இந்த நிலையில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். அப்போது கௌரவ் சர்மா இந்திய மொழியான சமஸ்கிருதத்தில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

 

இதுகுறித்து நியூசிலாந்துக்கான இந்திய தூதுவர் முக்தேஷ் பர்தேஷி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நியூசிலாந்து பூர்வகுடிகளின் மொழியான மாவோரியில் கௌரவ் சர்மா முதலில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து இந்திய செம்மொழியான சமஸ்கிருதத்தில் பதவியேற்றுள்ளார்.

 

இதன் மூலம் நியூசிலாந்து, இந்தியா ஆகிய இரு நாடுகளின் கலாசாரத்துக்கும் அவர் மதிப்பளித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

 

கௌரவ் சர்மா இந்தியாவின் இமாசல பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பிறந்தவர் ஆவார். இவர் நியூசிலாந்தின் ஓக்லண்டின் மருத்துவம் பயின்று பின்னர் அமெரிக்காவில் கலைத்துறை முதுமானி பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

 

இவர் ஹாமில்டன் நகரில் மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் அதே தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.