இந்தியா: தமிழ்நாடு

திருவண்ணாமலை அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில், சிப்காட் 3ஆவது அலகை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம், மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலத்தை தரிசு நிலம் என அரசு தரப்பு சொல்லி வருகிறது. ஆனால், அரசு தரப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், இது தரிசு நிலம் கிடையாது என விளக்கம் அளித்துள்ளனர். இது, விவசாய நிலம் என்று கூறி வரும் திருவண்ணாமலை விவசாயிகள், சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக 72 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். 

இப்படிப்பட்ட சூழலில், அவர்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த நவம்பர் 4ஆம் தேதி, விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 7 பேர் மீது மாவட்ட ஆட்சியரின்  உத்தரவின்பேரில்  குண்டர்  தடுப்பு சட்டம் பாய்ந்தது. விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செய்யாறு விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

எந்தவித முன்வழக்குகளும் இல்லாத நிலையில், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குண்டர் சட்டத்தை ரத்துசெய்யாவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.