கனடாவ பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில காலமாகவே அவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டிய நிலையில், சர்வதேச அளவிலும் அவர் சர்ச்சையில் சிக்கினார்.

இப்படிப் பல காரணங்களால் கனடாவில் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது. அங்கே வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கிறது. மேலும், பணவீக்கமும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

இதனால் மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், அது கருத்துக் கணிப்புகளிலும் கூட எதிரொலிக்கிறது. இதனால் கனடாவில் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை அவரது சொந்த கட்சியிலேயே அதிகரித்துள்ளது.

சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அடுத்துத் தேர்தல் நடைபெறும் 2025 வரை அவர் பிரதமர் பதவியில் இருப்பாரா என்பதிலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சொந்த கட்சியில் எதிர்ப்பு அதிகரித்தாலும் கூட கூட்டணி ஆதரவு இரு்பபாதேலே அவரால் இப்போது அதிகாரத்தில் இருக்க முடிகிறது. ஆனால், அங்கே எப்போதும் அதே நிலை இருக்கும் எனச் சொல்ல முடியாது.

ஏனென்றால் அங்கே வெளியாகும் சர்வேக்களில் ஆளும் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கான ஆதரவு தொடர்ந்து சரிந்து வருகிறது. சமீபத்தில் வெளியான சர்வேபடி எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் பியெர்ரே பொக்லீஎவரே என்பவருக்கு 10 முதல் 15 சதவிகிதம் கூடுதலாக வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல தேர்தல் முடிவு அமைந்தால் கன்சர்வேடிவ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிக்கும். ட்ரூடோ தனது பிரதமர் பதவியை இழக்க நேரிடும்.

இது குறித்து அங்குள்ள அரசியலைக் கவனிக்கும் வல்லுநர்கள் கூறுகையில், "இந்த எதிர்ப்பு ஏதோ இப்போது வந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே ட்ரூடோ மீதான எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்தே வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக ட்ரூடோ ஆட்சியில் இருந்த நிலையில், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ட்ரூடோவே காரணம் எனப் பொதுமக்கள் நம்புகிறார்கள். பிரச்சினையைத் தீர்க்கும் திறனும் ட்ரூடோவுக்கு இல்லை என்பதே மக்கள் எண்ணமாக இருக்கிறது. இதுவே தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கிறது" என்றார்.

ட்ரூடோவை வைத்துத் தேர்தலை எதிர்கொண்டால் நிச்சயம் தோல்விதான் என்பது லிபரல் கட்சியினருக்கே தெரியும். இதன் காரணமாகவே ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரது சொந்க கட்சியினருமே வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தால் அது தோல்வியை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடும். அதன்பிறகு ட்ரூடோவுக்கு அரசியல் எதிர்காலமே இருக்காது என்பதால் அவர் ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார். இருப்பினும், எதிர்ப்புகள் அதிகரிப்பதால் தேர்தல் நெருங்க நெருங்க அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.