இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

இந்த மோதலில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் அழைப்பு விடுத்து வருகின்ற நிலையில் நியூசிலாந்திலும்‌ பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்லாந்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சக கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்கள் சிவப்பு நிற பெயிண்ட் அடித்துள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள அமெரிக்க தூதரை வெளியேற்றவும், வாஷிங்டனில் உள்ள நியூசிலாந்தின் தூதரை நியூசிலாந்திற்கு அழைத்து வரவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

சிவப்பு நிற பெயிண்ட் அடித்தது மட்டுமன்றி 'போர்நிறுத்தம்' என்ற வாசகங்களும் கட்டிடங்களின் மீது ஒட்டப்பட்டிருந்தன.

Customs தெரு மற்றும் Quay‌ தெருவில் உள்ள கட்டிடங்களில் இவ்வாறான நாசவேலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 1.50 மணியளவில் Quay தெருவில் உள்ள கட்டிடத்தில் நாசவேலையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே வெலிங்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான‌ பிரீமியர் மாளிகையின் வேலியில் 'இனப்படுகொலையை நிறுத்து', 'காசாவை விடுவித்தல்' மற்றும் 'இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்து' ஆகிய வாசகங்கள் சிவப்பு நிற ஸ்ப்ரே பெயிண்ட் மூலம்‌ எழுதப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்...

அமைதியான போராட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் கருத்தைக் கூறுவதற்கான உரிமையை அமெரிக்கா ஆதரிக்கிறது, அதில் சிவில் போராட்டங்களில் சொத்துகளை நாசப்படுத்துவது அடங்காது என்று  கூறினார்.

 நாங்கள் இஸ்ரேல் மக்கள் மற்றும் அரசாங்கத்துடன் நிற்பது போல், பாலஸ்தீனிய குடிமக்களுடன் நாங்கள் நிற்கிறோம்.

பாலஸ்தீன மக்களின் நியாயமான அபிலாஷைகளை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது, மேலும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சமமான நீதி மற்றும் சுதந்திரம் கிடைப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

செய்தி நிருபர் - புகழ்