அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு  நிலவி வருகிறது. இந்தச் சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ நகருக்குச் செல்ல உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க பிஸ்னஸ்மேன்களுடன் இரவு உணவு நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அமெரிக்காவில் உள்ள டாப் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி ஜின்பிங் மற்றும் ஜோ பைடன் இடையே முதலில் சந்திப்பு நடைபெற உள்ளதாகவும், அதில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வணிகம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மையம் சார்பில் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்வு நடைபெறும். இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சீனாவில் உட்சபட்ச அதிகாரம் கொண்ட அதிபர் நேரடியாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் நிலையில், தங்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜி ஜின்பிங்கிடம் முறையிட அமெரிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இருப்பினும் இந்த இரவு விருந்து நிகழ்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்கா- சீனா வர்த்தக கவுன்சில் மற்றும் அமெரிக்க-சீனா உறவுகளுக்கான தேசிய குழு ஆகியவை இந்த நிகழ்வு குறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர்.

சீனா தனது கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிவிட்ட போதிலும், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா அரசு சீனா நிறுவனங்களுடன் வைத்திருக்கும் உறவு குறித்து எச்சரித்தே வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்த இரவு விருந்து நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் எந்தெந்த அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மறுபுறம் சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் இதில் பங்கேற்பது தவறான முன்னுதாரணம் என்று அமெரிக்காவிலே இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.