இந்தியா: தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். அதை பலமுறை பாஜக தலைவர்கள் பேசியுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாஜக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நாள் இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று கூறினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம் பாஜக ஆட்சி வந்ததும், பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சேகர்பாபு, திமுகவை பொறுத்தவரை ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒன்று சேரந்திருப்பது தமிழ்நாடு . இதில் பெரியார் கொள்கை ஏற்று கொள்ளப்பட வேண்டியவை, இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

முதல் கையெழுத்து என்று சொல்பவர் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்குமே தவிர தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை ஐடி ரெய்டு நடத்தினாலும் சரி, பாஜக ஆட்சி வராது என்றார். இது திராவிட மண் என்று கூறிய சேகர்பாபு, கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கும் அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தை மக்கள் அளிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.