இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டுதான் உள்ளது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார். இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் பொன்முடி விழாவை புறக்கணித்துள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ள உள்ளதாக அவரது பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், அவர் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இருப்பதால் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.