இலங்கை

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என அதன் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நவம்பர் 8, 9, 10 ஆகிய 3 நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.

இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட தபால் மா அதிபர், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான எந்தவொரு தபால் நிலையமும் மூடப்படாது எனவும், மேலும் நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் பயனுள்ள முதலீட்டு வாய்ப்பு, அதனை நடத்துவதற்கு பொருத்தமான கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாகவும் தபால் மா அதிபர் குறிப்பிட்டார்.