ஐரோப்பிய யூனியன் நாடுகள் அவ்வப்போது ஒன்றிணைந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
 
அந்த வகையில் ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த மாநாட்டுக்கு ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டுக்கு வந்தவர்களை ஜெர்மனி வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் அன்னாலெனா பேர்போக் வரவேற்றார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று மேடையில் புகைப்படம் எடுத்து கொள்ள முயன்றனர்.

இந்த வேளையில் குரேஷியா நாட்டின் 65 வயது நிரம்பிய வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன் முகம் சுளிக்கும் வகையிலான செயலை செய்தார். அதாவது அவரை வரேவற்ற ஜெர்மனி பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்போக்கினிடம் கைக்குலுக்கியதோடு, கன்னத்தில் திடீரென முத்தமிட முயன்றார். இதனால் அன்னாலெனா பேர்போக் அதிர்ச்சியடைந்து விலகினார்.

இந்த சம்பவத்தால் அன்னாலெனா பேர்போக் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுபற்றி குரேஷியா வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன் கூறுகையில், ‛‛சக ஊழியரிடம் அன்பான முறையில் தான் நடந்து கொண்டேன். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்னவென்று தெரியவில்லை'' என்றார். இதற்கு குரோஷிய பெண் உரிமை ஆர்வலர் ராடா போரிக் கூறுகையில், ‛‛கோர்டன் கிர்லிக் ராட்மேன் நடத்தை என்பது மிகவும் பொருத்தமற்றதாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது'' என தெரிவித்துள்ளார்.