உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, அதனை கட்டுப்படுத்த “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்ற கொள்கையை அமல்படுத்தியது. இதனால், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், அந்நாட்டின் மக்கள் தொகை சரிவை சந்தித்தது. 

இதனால் மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சீன அரசு அறிவித்தது. இதன்படி அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு வரிச்சலுகை, வீடு கட்ட மானியம், இலவச கல்வி என அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதன் உச்சமாக, மாணவ, மாணவிகள் காதலிப்பதற்கு ஏதுவாக மாதத்திற்கு ஒரு வாரம் கல்லூரிகளில் சிறப்பு விடுமுறைகளும் வழங்கப்பட்டன.

ஆனால், காதலிக்கத் தொடங்கிய கல்லூரி மாணவர்கள், அவுட்டிங், டேட்டிங், லிவிங் டு கெதர் உறவோடு அதனை முடித்துக் கொள்வதோடு திருமணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது.2013 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் ஒரு கோடியே 35 லட்சம் பேர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த ஆண்டு, வெறும் 68 லட்சம் பேர் மட்டுமே திருமணம் செய்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு என சீன இளைஞர்கள் திருமணத்தை தட்டிக்கழிப்பதாக கூறப்படுகிறது. இதனால், திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் ஆண்களுக்கும் பெண்கள் கிடைப்பதில்லை. இதனை சமாளிக்க திருமணம் ஆகாத பெண்களும், செயற்கை கருவுற்றல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சீன அரசு அனுமதி வழங்கியது. திருமணம் ஆகாத பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை.

இதனால், திருமணம் குறித்த பரப்புரையை மேற்கொள்வதே சரியானது என்று சீனா முடிவு எடுத்துள்ளது. இதன் வெளிப்பாடாக, அண்மையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் திருமணம், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு குறித்து எடுத்துரைத்தார். திருமணம் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றி இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் சீன அதிபர் வலியுறுத்தியுள்ளார்.