இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலால் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. அப்போது முதல் 21 வது நாளாக இஸ்ரேல் -ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயராக இருக்கும் இஸ்ரேல், காசா நகருக்குள் பீரங்கிகளுடன் நுழைந்துள்ளது. எனினும், இஸ்ரேலுக்கு மிகப்பெரும் சவால இருப்பது ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கங்கள்தான். பல பிணைக்கைதிகளை இந்த சுரங்கங்களில் தான் ஹமாஸ் அமைப்பினர் மறைத்து வைத்திருந்தனர்.

80 மீட்டர் ஆழத்தில் பல நூறு கி.மீட்டர்களுக்கு ஹமாஸ் இயக்கத்தினருக்கு சுரங்கங்கள் உள்ளது. பாதாள உலகம் என்று சொல்லப்படும் அளவுக்கு ஹமாஸ் அமைப்பினருக்கு இந்த சுரங்கங்கள் முக்கிய பாதுகாப்பு கேடயமாக உள்ளது. இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக இந்த சுரங்கங்கள் உள்ளன. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சவாலை எதிர்கொள்ள இஸ்ரேல் ரகசிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது "sponge bombs" எனப்படும் புதிய குண்டுகளை இஸ்ரேல் தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பாஞ்ச் குண்டுகள் உடனடியாக வெடித்து நுரைகளை வெளியேற்றும். உடனடியாக இது அப்பகுதி முழுவதும் பரவி பிறகு கடினமான திரை போன்று மாறிவிடுமாம். இந்த ரசாயன குண்டுகளை இஸ்ரேல் பரிசோதித்து வருவதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ரசாயன குண்டுகளில் வெடி பொருள் எதுவும் இருக்காது.

ஆனால், இடைவெளிகள் அல்லது சுரங்கங்களில் வாயில்களை முற்றிலும் சீல் வைக்க பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களில் இருந்து தாக்குதலை முன்னெடுப்பதை முடக்கும் விதமாக இந்த ரசயான குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இஸ்ரேல் கண்டுபிடித்து வைத்து இருக்கும் இந்த புதிய கருவிகள் பிளாஸ்டிக் கண்டெயினரில் பாதுகாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த ஸ்பாஞ்ச் பாம்ப்களில் ஒரு இரண்டு திரவங்களாக பிரித்து வைக்கப்பட்டு இருக்கும் மெட்டல் தடுப்புகள் இருக்கிறது. இதை செயல்படுத்தும் போது இந்த திரவங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து இலக்கை நோக்கி முன்னேறும். காசா எல்லையில் கடந்த 2021 ஆம் ஆண்டு போலியாக ஒரு சுரங்க பாதையை உருவாக்கி அப்போதே, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறது.