இந்தியா: தமிழ்நாடு 

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமி இந்திய நாட்டிற்கு பிரதமராக வர வாய்ப்பு இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி இருந்தார். எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது குறித்த கேள்விக்கு பிரஸ்மீட்டின் போது சிரித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மேலும், "நான் அதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை; கருத்து சொன்னால் தப்பாக போய்விடும். நீங்கள் கேட்ட உடனே நான் சிரித்தேன், அதையே எனது கருத்தாக வைத்துக் கொள்ளுங்கள். பிரதமர் பதவி எந்த அளவுக்கு ஆகிவிட்டது என்றுதான் நான் யோசிக்கிறேன். நாட்டிலேயே நம்பர் ஒன் பிரதமராக மோடி உள்ளார். அவர் மூன்றாவது முறை மட்டுமில்லை, நான்காவது முறையாகவும் பிரதமர் ஆவார். இந்த கேள்விக்கு சிரிப்புதான் என்னுடைய பதில்" என அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பதில் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கடம்பூர் ராஜூ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. தங்களது தலைவரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அவர் அந்த கருத்தினை கூறி இருக்கலாம்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி தனித்து நின்றோம். 37 இடங்களில் வெற்றி பெற்றோம். 1990ல் சந்திரசேகர் மற்றும் 1998ல் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக வர அதிமுக கொடுத்த ஆதரவு தான் காரணம். இதற்கு அண்ணாமலைக்கு சிரிப்பு வரவில்லையா? அன்றைக்கு அவர் இல்லை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து அவருடைய கருத்து என்று கூறிச் சென்று இருக்கலாம். இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. அண்ணாமலையை பார்த்து தான் நாங்கள் சிரிக்க வேண்டி உள்ளது. என காட்டமாகக் கூறியுள்ளார்.