ஹமாஸ் படைக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் படை முதலில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேலும் இறங்கியுள்ளது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் படை கையெறி குண்டுகளுடன் சுற்றி நின்ற போதிலும் அவர்களிடம் இருந்து ​​65 வயதான இஸ்ரேலியப் பெண் ரேச்சல் எட்ரி புத்திசாலித்தனமாக தப்பியுள்ளார்.

ரேச்சல் மற்றும் அவரது கணவர் டேவிட் இருவரையும் ஹமாஸ் படை பிணையக் கைதிகளாக வைத்திருந்தனர். இவர்களின் மகனும் இஸ்ரேல் காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். தனது பெற்றோரைப் பார்க்க வீட்டிற்கு வந்த போது ரேச்சல் கழுத்தில் கையெறி குண்டை வைத்துக் கொண்டு பயங்கரவாதி ஒருவன் நின்றுள்ளான். இதைப் பார்த்ததும் போலீஸில் இருந்த மகனுக்கு பேரதிர்ச்சி.

அப்போத சமயோசிதமாகச் செயல்பட்ட ரேச்சல் மொத்தம் 5 பயங்கரவாதிகள் வீட்டில் பதுங்கி உள்ளனர் என்பதைத் தனது மகளுக்குக் காட்டும் வகையில் தனது முகத்தில் 5 விரல்கள் வைத்துள்ளார். அதைக் கவனித்ததும் நிலைமை உணர்ந்த அவரது மகன் கூடுதலாகப் படைகளை அழைத்து வர அமைதியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அதன் பிறகு சுமார் 20 மணி நேரம் ஹமாஸ் பயங்கரவாதிகளை இந்த பெண் சமாளித்துள்ளார். அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து காபி, பிஸ்கேட் என அனைத்தும் கொடுத்து மகிழ்ச்சியாக வைத்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறுகையில், "அவர்களுக்குப் பசி எடுத்தால் கோபம் வரும். பிறகு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும். இதன் காரணமாகவே நான் காபி, பிஸ்கேட், கோக் எனக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். அவர்கள் எதாவது பேச ஆரம்பித்தால் வந்து சென்ற போலீஸ் எனது மகன்தான் என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சமும் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே அவர்களிடம் நான் ஹீப்ரு கற்றுத் தருகிறேன்.. நீ எனக்கு அரபி மொழியைச் சொல்லிக் கொடு என்றெல்லாம் பேசிக் கொண்டே இருந்தேன். அது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பதை நான் உணர்ந்தே இருந்தேன். சுமார் 20 மணி நேரம் நான் காலத்தை ஓட்ட வேண்டி இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.

மறுநாள் நள்ளிரவில் வீட்டில் புகுந்த மீட்புக் குழு ஐந்து பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். மிகவும் சமஜோதிமாக செயல்பட்டு பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய அந்த பெண்ணை பலரும் பாராட்டினர். இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு வந்த போது அவரை நேரில் சந்தித்து துணிச்சலாகச் செயல்பாட்ட இந்த பெண்ணை பாராட்டியுள்ளார்.