இந்தியா: தமிழ்நாடு

தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் ஏழைகள், ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடையை நடத்துகின்றனர் என்றும், திமுக அமைச்சர்கள் தான் மது ஆலைகளை நடத்துவதால் மதுக்கடைகளை மூட மாட்டார்கள் என்றும் அண்ணாமலை விமர்சித்ததாக குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது...

முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதே படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்றுதான் சொல்லியிருக்கிறார். 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. எல்லாரும் இதை பிரக்டிக்கலாக பார்க்க வேண்டும். யாருக்கும் டாஸ்மாக் நடத்த வேண்டும் என்ற எண்னமோ விருப்பமோ இல்லை. ஆனால் திடீரென மூடிவிட முடியாது.

எனவே, மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு கவுன்சிலிங் வைக்க ஏற்பாடு செய்து இருக்கிறோம். அதேபோல கடையில் இருக்கிற சேல்ஸ்மேனுக்கு தெரியும் யார் புதிதாக கடைக்கு வருகிறார்கள் என்று. அதுவும் இளைஞர்களாக வந்தால் அவர்களை உடனடியாக அழைத்து கவுன்சிலிங் கொடுத்து அந்த பழக்கத்தில் இருந்து தடுக்க வேண்டும்.

அதற்குள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப்படுகிறது. இதெல்லாம் தற்போது அரசாங்கம் எடுத்துக்கொண்டு வரும் நடவடிக்கைகள். ஆனால் இதை பழக்கப்படுத்திவிட்டால் உடனே நிறுத்த பண்ன முடியாது. வெளியில் இருந்து பார்த்து குற்றசாட்டு சொல்வது சுலபம். ஆனால், மதுபழக்கத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.

டாஸ்மாக் ஊழியர்களின் குறைகளை தீர்க்கவும், டாஸ்மாக் கடையின் வாடகை, மின் கட்டணத்தை நேரடியாக தலைமை அலுவலகத்தில் இருந்து செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலில் வாடகை என்பது வரைமுறை இல்லாமல் இருந்தது. தற்போது அதையும் வரைமுறைப்படுத்தியுள்ளோம். சேதம் ஆவதற்கு இழப்பீடு இல்லாமல் இருந்தது. அதையும் ஏற்பாடுசெய்துள்ளோம். இப்படி பல விடயங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இவையெல்லாம் ஒருநாள் இரண்டு நாளில் செய்யும் விடயம் இல்லை. குறைந்தபட்சம் 3, 4 மாதம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.