இஸ்ரேல் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் மோசமான தாக்குதலை நடத்தினர். கடந்த சில ஆண்டுகளில் நடந்ததிலேயே இது மோசமான தாக்குதலாக இருக்கிறது. இதையடுத்து இஸ்ரேலுக்கும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்கே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். முதற்கட்டமாக நேற்று அவர் இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினார். இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ளவும் தங்களைத் தாக்கிய ஹமாஸ் படைக்குப் பதிலடி கொடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாகத் தெரிவித்த ரிஷி சுனக், இஸ்ரேலுக்கு தான் முழு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக இஸ்ரேலுடன் தாங்கள் இருப்பதைக் காட்ட அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் நாட்டிற்குச் சென்ன்றிருந்தார். இந்தச் சூழலில் தான் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த ரிஷி சுனக் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், "ஹமாஸ் படை போல இல்லாமல் அப்பாவி பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் இஸ்ரேல் தெளிவாக உள்ளது எனக்குத் தெரியும். மேலும், போர் நடக்கும் நிலையில், இங்கிருந்து பிரிட்டன் மக்களை வெளியேற்ற இஸ்ரேல் உதவி இருக்கிறது. அதற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஹமாஸ் தாக்குதலால் இஸ்ரேல் மட்டுமின்றி பாலஸ்தீனியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு நன்றி" என்றார்.

மேலும், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் படை பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ள நிலையில், அவர்களை விடுக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரிஷி சுனக் தெரிவித்தார். மேலும், காசா மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதற்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.