இந்தியா: தமிழ்நாடு

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசையும், மாநில திமுக அரசையும், கர்நாடக அரசையும் நாம் தமிழர் கட்சி தலைமை சீமான் தொடர்ச்சியாக காட்டமாக விமர்சித்து வருகிறார். அண்மையில் சீமான் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசும்போது, "சந்தன மரங்கள் தான் இந்த மாவட்டத்தின் பெரிய வருவாயாக இருந்தது. மீண்டும் காட்டு இலாகா அமைச்சகம் அந்த மரங்களை வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும். எங்க ஆளு வீரப்பன் இருக்கும் போது மரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தது. அவரை அநியாயமாக சந்தன மரங்களை கடத்தினார், யானை தந்தங்களை வெட்டினார் போன்ற குற்றச்சாட்டுகளை பரப்பினார்கள்.

அவர் இருந்த போது காட்டில் மரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தன. அவர் இருக்கும் போது காவிரி பிரச்சனை போன்றவை தமிழகத்திற்கு வந்திருக்குமா? அவர் மீது அநியாயமாக பழி போட்டு, அவரை ஒரு மாயாவி என்றும் திருடன் என்றார்கள்.

அவர் சந்தன மரங்களை வெட்டி விற்றார். சரி. ஒப்புக்கொள்கிறேன். யானை தந்தங்களை வெட்டி விற்றார். சரி, அதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்; சரி விற்றவர் இங்கே இருக்கிறார், அதனை யார் வாங்கினார்கள் எனக் கேட்டால் இப்போதும் பதில் இல்லை.

சரி, அவற்றை எல்லாம் விற்றவர் காட்ட்டுக்குள் பெரிய பெரிய பங்களாவையா கட்டினார்? ஏதாவது சேர்த்து வைத்திருக்கிறாரா? காட்டுக்குள் இருந்தவர் சாராயம் காய்ச்சினாரா? பீடி, சிகரெட் குடித்தாரா? கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணைத் தொட்டுத் தூக்கிச் சென்றாரா? நாகப்பாவை தூக்கிக் கொண்டு போன அவருக்கு நயன்தாராவை தூக்கி கொண்டு போகத் தெரியாதா?

தமிழர் மரபு தவறாமல் வாழ்ந்த அவர். அவர் வெளியே வந்து பேசிவிட்டால் பலர் சிக்கி விடுவார்கள் என்பதால் அவர் மீது பழி சுமத்தி கொன்றுவிட்டார்கள். அதுதான் உண்மை எனத் தெரிவித்துள்ளார்.