இந்தியா: தமிழ்நாடு

மத்திய அரசு சமீபத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது . இந்த மசோதா மூலம் நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால் இந்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகே இது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனால் குறைந்தபட்சம் இந்த மசோதா செயல்பாட்டுக்கு வர 2029ம் ஆண்டு வரை காலம் எடுக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளதாக திமுக நினைக்கிறது. அதன்பேரில் தான் முதல்வர் முக ஸ்டாலின், தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் 'மகளிர்உரிமை மாநாடு' நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் வரவேற்றார். இதன்மூலம் சோனியா காந்தி 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வந்துள்ளார்.

இதுதவிர மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை திமுக எம்பி கனிமொழி மேற்கொண்டுள்ளார். மாநாட்டில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் சென்னை ஒய்எம்சிஏ திடல் மற்றும் அவர்கள் தங்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.