காலங்காலமாக ஒடுக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்தன. ஆனால் அகதிகளாக வந்த யூதர்களோ இந்த குரல்களை நசுக்கி இஸ்ரேல் எனும் நாட்டை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றனர். இதன் விளைவு பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் உருவாகி அது ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது.

இதுதான் சரியான நேரம் என இஸ்ரேலும், மேற்கு நாடுகளும் இந்த அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அதன் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 7ம் திகதி பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்', இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை தொடுத்தது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணை ஏவியதால் இஸ்ரேலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. மத்திய கிழக்கில் மிகவும் பாதுகாப்பான நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை உக்கிரமாக தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் 8வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில் காசாவில் உயிரிழப்பு 1500ஐ கடந்திருக்கிறது.

இந்நிலையில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் மோதலை தீவிரப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் பங்காளி நாடான அமெரிக்கா, தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. மற்றொருபுறம் இளைய பங்காளியான பிரிட்டன் தனது போர் கப்பலை அனுப்ப முயன்று வருகிறது. இவை மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த பலத்தை புரிந்துக்கொண்ட இஸ்ரேல் காசா எனும் பகுதி முற்றிலுமாக தடம் தெரியாமல் அழிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "எதிரிகள் செய்த கொடூரமான செயல்களை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டிருக்கிறோம். வேதனையும், துயரமும் நிறைந்த இந்த இருண்ட நாளில் நம் மக்களின் வீர செயல்கள் இஸ்ரேல் வரலாற்றின் ஓர் அங்கமாக மாறும். நாங்கள் எதிரிகளை முழு பலத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்கி வருகிறோம். அவர்கள் செய்த தவறுக்கு தற்போது விலை கொடுக்க தயாராகியுள்ளனர். அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் உலக தலைவர்கள் எங்களுடன் பேசியிருக்கிறார்கள். இதன் மூலம் இஸ்ரேல் சர்வதேச ஆதரவை பெற்றிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 1500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 12 ஐநா ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் காசாவுக்கான மின்சாரம், உணவு, குடிநீர் போன்றவை துண்டிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான போர் மீறல் என்று உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.