இந்தியா: தமிழ்நாடு

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சோனியா காந்தி நாளை சென்னைக்கு வருகை தரவுள்ளார். இதனிடையே நாளை காலை சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சோனியா சந்திக்கவுள்ளதால் காங்கிரஸார் சென்னையில் குவிந்து வருகின்றனர்.

மேலும் சோனியா காந்தியை வரவேற்க தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் எழுச்சிமிகு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே நாளை காலை தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்துப் பேசும் சோனியா காந்தி, தமிழக அரசியல் நிலவரம், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி சில நிமிடங்கள் பேசுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வரும் சோனியா காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மதிய விருந்து கொடுக்க உள்ளார். இந்த விருந்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. 

முதலமைச்சர் ஸ்டாலின் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். சோனியா காந்தியுடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கொடுக்கும் மதிய விருந்து நிகழ்ச்சி அவரது சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் நடைபெறுகிறதா அல்லது நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறதா என்ற விவரம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு ப்ரியங்கா காந்தி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.