இந்தியா: தமிழ்நாடு

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றன. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்தால், திமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் அண்மையில் கூறி இருந்தார்.

இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 10ஆம் தேதி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது தண்டனை காலத்தை கடந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், முதல்கட்டமாக 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகள் ஆகஸ்ட் 24 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தீவிரவாதத்துக்கு வண்ணம் கிடையாது. தீவிரவாதத்தை ஒரு சமுதாயத்துக்குள், சாதிக்குள், மதத்துக்குள் அடைக்க வேண்டாம். கோவை குண்டுவெடிப்பை தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை வெளியில் விடக் கூடாது. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிகள்தான். இன்னும் அங்கு தீவிரவாதம் ஒழியவில்லை, அப்படியே இருக்கிறது. எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகளா என்றால் அது கிடையாது. மேலும், இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை வெளியில் விடக்கூடாது என்று நான் கூறவில்லை. தீவிரவாதிகள் என்பதால் அவர்களை வெளியில் விடக் கூடாது என்கிறேன்" எனத் தெரிவித்தார்.