இந்தியா: தமிழ்நாடு

சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. 2023-24 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் மூன்றாவது நாளான இன்று நிறைவடைகிறது.

இதனிடையே இன்று எதிர்கட்சித்துணைத்தலைவர் இருக்கை விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமானதை அடுத்து அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் நீக்கப்பட்டனர். இதனையடுத்து சட்டசபையிலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆர்.பி.உதயகுமார் புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதால் அங்கே ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இருக்கை ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை என்று கூறினார். யாருக்கு எந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்பது எனது உரிமை என்று கூறிய அவர், கட்சிப்பிரச்சினையை நீக்க வேண்டிய இடம் இது இல்லை என்றும் கூறினார்.

இதனை ஏற்க மறுத்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அரசுக்கு எதிராகவும், சபாநாயகருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் அவைக்காவலர்கள் கூண்டோடு வெளியேற்றினர். உள்கட்சி பிரச்சினையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார். அதிமுக தலைமை குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிகமானதுதான் என்றும் அவர் கூறினார்.