இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் மதிய உணவுகள் போன்ற சலுகைகள் இவ்வாண்டிலிருந்து முறையாக செயற்படுத்துவதற்கு கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 2030 ஆம் ஆண்டளவில், அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

அத்தோடு  பிரான்ஸ் அரசாங்கத்துடனும் தொடர்புடைய கட்சிகளுடனும் இது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கு மத்தியில் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை இடையூறு இன்றி பேணுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய அமைச்சர், நிலையான கல்வித் திட்டத்தைத் தொடர அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே பாடசாலைகளில் அதிபர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் 4718 அதிபர் நியமனங்கள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.

ஆசிரியர் கல்வி சேவையில் 705 வெற்றிடங்களும், கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் நிரப்புவதன் மூலம் ஆசிரியர் ஆலோசகர் சேவையில் உள்ள முரண்பாடுகள் நிவர்த்தியாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஒவ்வொரு கட்டமைப்புகளுக்கேற்ப மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.