Breaking News

உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...!!

உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...!!

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து தனது அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று வரவேற்றார்.

ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக கனடா சென்றுள்ள ஜெலன்ஸ்கி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ரஷியாவின் ஆக்கிரமிப்பு நமது வெற்றியின் மூலம் முடிவுக்கு வர வேண்டும். உக்ரைனில் மீண்டும் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்த முயற்சி செய்யாத வகையில் ரஷியா நிரந்தரமாக தோற்கடிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்

முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோ பேசுகையில், "நேட்டோ உள்ளிட்ட நமது கூட்டாளிகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம். உக்ரைனுக்கு அடுத்த வருடமும் தொடர்ந்து கனடா அரசு பொருளாதார உதவிகளை வழங்கும். ஆனால் நாங்கள் விரும்புவது உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு ராணுவ உதவிகளோ அல்லது பொருளாதார உதவிகளோ தேவைப்படாத வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான். ஆனால் அந்த அமைதி ஆக்கிரமிப்பாளர்களால் வழங்கப்படும் போலியான சமரசங்களால் ஏற்படாது. நிரந்தரமான அமைதி என்பது ராணுவத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும். உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும்." இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.