இந்தியா: தமிழ்நாடு

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உலகமே ஒரு சிறிய போனுக்குள் முடிந்துவிடுவதாக கருதும் பலரும் அக்கம் பக்கத்தினருடன் கூட பேசுவது கிடையாது என்று கவலை தெரிவித்துள்ளார். இளைஞர்கள், மாணவர்கள் மட்டும் தான் இப்படி செய்கிறார்கள் என்றில்லை பெரியவர்களுமே போனுக்குள் தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொண்டு சமூகத்தில் மற்றவர்களுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

பள்ளிகளில் மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர் மதுரையில் ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வீட்டில் தனது பிள்ளைகளுக்கு தாம் போன் கொடுப்பதில்லை என்றும் அதே போல் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் வாய்ப்பையும் கொடுப்பதில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

செல்போன் பயன்பாட்டின் போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றார். மேலும் தாம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றிருப்பதாகவும் இன்னும் வரும் நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை பெறுவார்கள் எனவும் கூறியுள்ளார்.