விஜயலட்சுமியாக சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கை முழுவதும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து வந்த நிலையில், வினு சக்கரவர்த்தி வண்டி சக்கரம் படத்தில் அறிமுகப்படுத்த தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ள சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு தினம் இன்று.

1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திராவில் பிறந்த விஜயலட்சுமி வெறும் 4ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். துணை நடிகையாகவும் ட்ரூப் டான்ஸராகவும் களமிறங்கிய சில்க் ஸ்மிதா தனது பார்வை மற்றும் வசீகரமான நடிப்பால் ஹீரோயினாகவும் மாறினார். சில்க் இல்லாத சினிமாவே இல்லை என்கிற நிலைக்கு உச்சத்துக்கு வந்தபோது 35 வயதிலேயே அவர் திடீரென மறைவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆம், சில்க் ஸ்மிதா இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்னமும் அவரது புகழ் அப்படியே மறையாமல் இருக்கிறது. 19 வயதில் மலையாள திரைப்படங்களில் க்ரூப் டான்ஸராக அடையாளம் தெரியாமல் ஆடிக் கொண்டிருந்த சில்க் ஸ்மிதா தனது விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி அடைந்து 35 வயதுக்குள் 360 படங்களில் நடித்து இப்படியொரு சாதனையை இனிமேல் யாராலும் செய்ய முடியாது என்கிற அளவுக்கு குறுகிய காலத்திலேயே ஓயாமல் சினிமா, கேமரா, லைட்ஸ், ஆக்‌ஷன் என ஓடிக் கொண்டிருந்தார்.

சில்க் ஸ்மிதாவின் மரணம் இன்னும் மர்மமாகவே இருப்பதாக பலர் கருதி வருகின்றனர். உயிரிழந்த நிலையில், ராயப்பேட்டா மருத்துவமனையில் வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் உடலை பெற்றுக் கொள்ள ஆள் இல்லாமல் அநாதை பிணமாக கிடந்தார் என்றும் தகவல் அறிந்து அவரது உறவினர்கள் தான் பின்னர் வந்து எடுத்துச் சென்றதாக தகவல்கள் உள்ளன.

சில்க் ஸ்மிதா மறைந்து 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் சில்க் ஸ்மிதாவின் காட்சி இடம்பெற்று சில்க் ரசிகர்களை சிலிர்க்க வைத்து வருகிறது. சில்க் போல இருப்பதால் அதை பயன்படுத்தி ரீல்ஸ் போட்டு வந்த விஷ்ணுப்ரியா திரையில் சில்க் ஸ்மிதாவை மீண்டும் பிறக்க வைத்து விட்டார். உண்மையான கலைஞர்களுக்கு மரணமே இல்லை என்பது மீண்டும் நிதர்சனம் ஆகியுள்ளது.