இந்தியா: தமிழ்நாடு
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை 28ஆம் திகதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை தொடங்கினார். மொத்தம் 168 நாட்கள் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி இரண்டாவது வாரம் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார் அண்ணாமலை.
இதனிடையே தென் மாவட்டங்கள் முழுவதும் பாதயாத்திரையை முடித்த அண்ணாமலை, இப்போது கொங்கு மண்டலத்திற்குள் அடியெடுத்து வைக்கவுள்ளார். அந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அண்ணாமலை இன்று செல்லவுள்ள நிலையில் அவருக்கு அங்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கட்சியினரை அணிதிரட்டி ஆலோசனை நடத்திய பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன், ''நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன்?'' என்ற புத்தகத்தை பொதுமக்களுக்கு விநியோக்கும் வகையில் கட்சியினருடன் பேரணியாக பொள்ளாச்சி வீதிகளில் வலம் வந்தார்.
அண்ணாமலை பாதயாத்திரைக்கு போட்டியாக பொள்ளாச்சி திமுக நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் நடத்திய இந்த பேரணி மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்ததோடு லோக்கலில் பேசுபொருளாகவும் மாறியது. இதனிடையே அண்ணாமலைக்கு பொள்ளாச்சியை போல் வேறு எந்த ஊரிலும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.