இந்தியா: தமிழ்நாடு 

எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஒ பன்னீர்செல்வம் உள்ள நிலையில், அந்த பொறுப்பை ஆர்.பி.உதயகுமாருக்கு அளிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி வருகிறது. சட்டப் பேரவையில் அவருக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரி வருகின்றனர்.

இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவுவை இன்று சந்தித்து மனு அளித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்துள்ளோம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என மூன்றாம் முறையாக கோரிக்கை வைத்துள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருக்கை வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக சட்டப் பேரவைத் தலைவர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை துணைத்தலைவர் இருக்கை வழங்குகிறீர்களா? இல்லையா? என கடிதத்தின் மூலம் கேட்டுள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் ஏன் நிறைவேற்றவில்லை என்று கடிதம் தருமாறு கோரியுள்ளோம். வழக்கமான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.