இந்தியா: தமிழ்நாடு
மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,001 மூத்த திமுக உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் நடைபெற்ற சனாதான மாநாட்டில் நான் பேசியது ஐந்து நிமிடம் தான். ஆனால் தற்போது நாடு முழுவதும் அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் பேசாத விஷயங்களை எல்லாம் பேசியதாக பொய்யாக அது உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது. என் தலைக்கு விலை வைக்கப்பட்டது. ஆனால் இப்போது சனாதனத்தை ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
நானாவது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். இன்று சனாதனத்தை ஒழித்துவிட்டோம் என்று கூறியுள்ளார் செல்லூர் ராஜூ. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன என் தலைக்கே 10 கோடி ரூபாய் விலை வைத்தார்கள் என்றால், சனாதனம் ஒழிந்துவிட்டது என்று கூறிய செல்லூர் ராஜூவின் தலைக்கு எத்தனை கோடி வைக்கப் போகிறார்கள்? தைரியம் இருந்தால் செல்லூர் ராஜு, அவரது ஓனர்கள் அமித்ஷாவிடம், மோடியிடம் இதை கூறுவாரா? நான் சினிமாவில் இருந்து வந்ததால் விஷயம் தெரியவில்லை எனக் கூறும் செல்லூர் ராஜூ, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றார்.
முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, "விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாகவே பேசி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்ததால் அவருக்கு அரசியல் வரலாறு தெரியாது. தமிழ்நாட்டில் அண்ணா, பெரியார் காலத்திலேயே சனாதனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதிமுகவில் சாதி, மத, பேதமின்றி செயல்பட்டு வருகிறோம். அதிமுகவின் அவைத் தலைவராக ஓர் இஸ்லாமியரை எடப்பாடி பழனிசாமி அமர வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். சனாதனம் பற்றி பேசுகிற உதயநிதி ஸ்டாலின், திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை வர விடுவார்களா?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.