உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள எலான் மக்ஸ், வித்தியாசமான முயற்சிகளுக்கு சொந்தக்காரர் முளையில் சிப் பொருத்தும் முயற்சிகளுக்காக இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நியூராலிங் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

மனிதனின் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்கும் இடையே இணைப்பை உருவாக்க சிப் ஒன்றை நியூராலிங் உருவாக்கி வருகிறது.

இந்நிலையில் பக்கவாத நோயாளிகளுக்கு சிப் பொருத்தி ஆய்வு செய்வதற்கு மனித சோதனைக்கான ஆட்களை தேர்வு செய்ய தங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக நியூராலிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

கர்ப்பப்பை வாய் முதுகெலும்பு காயம் அல்லது அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் காரணமாக பக்கவாதம் உள்ளவர்கள் ஆய்வுக்கு தகுதி பெறலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர் என்பதை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

மக்கள் தங்கள் எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி கணிணியின் கி போர்ட் மற்றும் கர்சரை கட்டுப்படுத்த உதவுவதே அதன் ஆரம்ப கட்ட இலக்காக உள்ளது.

இந்த சோதனை முடிவடைய சுமார் 6 ஆண்டுகள் ஆகலாம். இந்த சோதனையை செய்ய கடந்த மே மாதம் அமெரிக்காவின் எஃப்டிஏ ஏஜென்சியிடம் நியூராலிங்க் நிறுவனம் அனுமதி வாங்கிய நிலையில், தற்போது சிப் பொருத்தவும் அனுமதி கிடைத்துள்ளது.

10 பேரின் மூளையில் இந்த சிப்பை பொருத்தி சோதனை செய்வதற்கு அனுமதி கிடைக்கும் என நியூராலிங் நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான நபர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எஃப்டிஏ தெரிவித்தது.

ஆனால், எத்தனை பேரிடம் சோதனை செய்வதற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளது என்ற தகவலை நியூராலிங்க் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

உடல் பருமன், மன இறுக்கம், மனச்சோர்வு உள்ளிட்ட பல சிகிச்சைகளுக்கு இந்த சிப் உதவும் என்று எலான் மஸ்க் பெரிதும் நம்புகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குரங்கை வைத்து இந்த சோதனையை நியூராலிங் நிறுவனம் வெற்றிகரமாக செய்திருந்தது. இந்த சிப்பை மனிதர்களுக்கு பொருத்துவது பாதுகாப்பானது என்று தற்போது நடைபெறவுள்ள சோதனையில் நிரூபிக்கப்பட்டாலும், வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.