இந்தியா: தமிழ்நாடு

அதிமுக பாஜக இடையே மோதல் தற்போது உச்சம் அடைந்து உள்ளது.

முத்துராமலிங்கத்தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. பாஜகவிற்கு இது பேரிடியாக மாறி உள்ளது. கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதில் இனி பாஜக முடிவு எடுக்க எதுவும் இல்லை.

இதனிடையே திடீர் திருப்பமாக கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் பேசக்கூடாது; கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இருந்தாலும் பாஜக தலைவர் அண்ணாமலை இந்த கூட்டணி குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் ஆலோசனை செய்ய உள்ளார். இன்று நடக்கும் ஆலோசனைக்கு பின் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பார்.

இன்றைய அறிவிப்பில் சில திருப்பங்கள் இருக்கலாம் என்கிறார்கள் பாஜக தரப்பினர். அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள்தான் இந்த கூட்டணி முறிவிற்கு காரணம் ஆகி உள்ளது.