இந்தியா: தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வந்தாலும், டெல்லி பாஜக தலைமை தலையிட்டு இந்தக் கூட்டணியை முறியாமல் பார்த்துக் கொண்டது. ஆனால், அண்ணாமலை அதிமுகவை சீண்டுவதை தொடர்ந்து வந்தார். முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை 'ஊழல் குற்றவாளி' என்று கூறி அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை சமீபத்தில் பேரறிஞர் அண்ணாவை பற்றி பேசி அதிமுகவை மீண்டும் சீண்டியுள்ளார்.
மதுரை தமிழ் மாநாட்டில் முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கேட்டு ஓடி வந்தவர் அண்ணாதுரை எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் அண்ணாமலை.
இதற்கு அதிமுக மூத்த தலைவர்களான செல்லூர் ராஜு, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அண்ணாமலைக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினர். இந்நிலையில் தான் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் அதிமுகவின் ஜெயக்குமார். தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, பாஜகவை எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றுகிறோம். தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஜெயக்குமார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு அரசியல் அரங்கில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. பாஜகவினர் ஜெயக்குமார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவின் முடிவை வரவேற்றுள்ளார். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அது உட்கட்சி பிரச்சனை;அதில் நாம் தலையிடக்கூடாது" என சிரித்தபடி பட்டென கூறினார்.