நேற்றைய தினம் ஆக்லாந்து Albany பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் 16 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் Albany பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கினர்.
நேற்று மதியம் 1 மணிக்கு முன்னதாக Albany பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
ஒருவர் ஆபத்தான நிலையில் ஆக்லாந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Waitematā CIB டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் Callum McNeill தெரிவித்தார்.
குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இரண்டாவது நபருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது இளைஞன் இன்று ஹமில்டன் இளைஞர் நீதிமன்றத்தில் நீதிபதி டெனிஸ் கிளார்க் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர், அடுத்த அக்டோபர் மாதம் ஆக்லாந்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
துப்பறியும் இன்ஸ்பெக்டர் Callum McNeill, பொலிஸார் நேற்றிரவு ஹமில்டனுக்குச் சென்று வைகாடோ சிஐபியின் உதவியுடன் இளைஞரைக் கைது செய்ததாக தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முறையான செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை நாங்கள் வெளியிட முடியும் என அவர் தெரிவித்தார்.
செய்தி நிருபர் - புகழ்