இந்தியா: தமிழ்நாடு
பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன் என தெரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்...
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி விமர்சித்தார். பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பின்னர் அண்ணாவை பற்றி, பெரியாரை பற்றி, எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுகிறார் அண்ணாமலை. எங்களுடைய முன்னோடிகளை விமர்சனம் செய்வதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த விமர்சனங்களுக்கு அதிமுகவினர் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இதைத்தான் இப்போது சொல்ல முடியும். எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து கேள்வி கேளுங்கள்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் போனால் எங்களுக்கு இழப்பு இல்லை. கூட்டணி தர்மத்தை மீறித்தான் அண்ணாமலை பேசி வருகிறார்.
அண்ணாமலைக்கு திமிர் பிடித்துவிட்டது. அண்ணாமலைக்கு தகுதிக்கு மீறிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. சிங்க கூட்டத்தைப் பார்த்து சிறுநரி ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது. அதிமுக மூலம்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அடையாளம் உள்ளது.
அதிமுகவின் இந்த அறிவிப்பால் பாஜக மூத்த தலைவர்கள் சந்தோசப்படுவார்கள். அண்ணாமலை ஒரு கோழை. கூட்டணி கிடையவே கிடையாது, கூட்டணி தர்மத்தை மீறக் கூடிய ஒருவரை அதிமுக தொண்டர்கள் மதிக்க வேண்டிய தேவை இல்லை. தன்மானத்தின் அடிப்படையில் அதிமுக தொண்டர்கள் தாங்கமாட்டார்கள். அதனால்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்கிற நிலைப்பாட்டைத் திரும்ப திரும்ப சொல்கிறோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.