டெல்லியில் கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவும் வந்திருந்தார். ஆனால், அவர் 10ம் தேதி நடந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவில்லை.
அதேவேளை, ஜி20 உச்சிமாநாட்டின் போது இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் உள்ள இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் வருவதாகவும் இது தொடர்பாக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தினார். காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து ஜி20 மாநாட்டை நிறைவு செய்த பின் பிற நாடுகளின் தலைவர்கள் சொந்த நாடு சென்ற நிலையில் விமான கோளாறு காரணமாக ட்ரூடோ கனடா செல்வதில் கால தாமதம் ஏற்பட்டது. திட்டமிட்ட காலத்தை கடந்து அவர் 2 நாட்கள் கழித்து இந்தியாவில் இருந்து புறப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியது. இதனால் இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் கனடா வர்த்தக்கத்துறை மந்திரியின் இந்திய வருகை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டிற்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த அடுத்த மாதம் கனடா வர்த்தகத்துறை மந்திரி மெரி நக் இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.
ஆனால், ஜி20 மாநாட்டின் போது கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியாவால் புறக்கணிக்கப்பட்டதையடுத்து கனடா வர்த்தகத்துறை மந்திரி மெரியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மெரியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை கனடா அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.