திருநங்கைகளுக்கு எதிரான சர்ச்சைக்குரிய பிரித்தானிய பெண் செயற்பாட்டாளர் கெல்லி-ஜே கீன்-மின்ஷுல் (போஸி பார்க்கர்) நியூசிலாந்திற்கு மேற்கொள்ளவிருந்த தனது பயணத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
தானும் தனது ஆதரவாளர்களும் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்ற அச்சத்தில் நியூசிலாந்திற்கான திட்டமிடப்பட்ட பயணத்தை கைவிடுவதாகக் அவர் தெரிவித்துள்ளார்.
போஸி பார்க்கர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் திருநங்கைகளுக்கு எதிராக ஒரு பேரணியை நடத்த நியூசிலாந்திற்கு வந்தார்.
ஆக்லாந்தில் ஆல்பர்ட் பூங்காவில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அந்த பேரணி கைவிடப்பட்டது.
மேலும் அவர் மீது தக்காளி சாற்றை தெளித்து பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்ப்புகள் வலுத்தை அடுத்து பார்க்கர் உடனடியாக காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டார்.
மேலும் மறுநாள் வெலிங்டனில் திட்டமிடப்பட்ட தனது பேரணியை ரத்து செய்துவிட்டு அவர் நியூசிலாந்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அவர் இதுவரை சென்றிராத பெண்களுக்கு மிகவும் மோசமான ஒரு இடத்தை விட்டு வெளியேறுகிறேன்" என நியூசிலாந்தை விமர்சித்தார்.
மேலும் ஒரு ட்விட்டர் நேரடி ஒளிபரப்பில் பேசிய போஸி பார்க்கர் நியூசிலாந்திற்கு நான் மீண்டும் வருவேன். இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம், பெண்களே என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் அடுத்த வாரம் நியூசிலாந்திற்கு வரவிருந்த நிலையில் தற்போது அவர் தனது பயணத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவில், கீன்-மின்ஷுல் கூறுகையில், அதிகாரிகள் தன்னை நியூசிலாந்திற்குள் அனுமதித்தாலும், தன்னை அல்லது தனது ஆதரவாளர்களை பொலிஸார் பாதுகாக்க மாட்டார்கள் என்று தான் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
செய்தி நிருபர் - புகழ்