இந்தியா: தமிழ்நாடு
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "தமிழ்நாட்டில் ஸ்ரீராம் பெயரைச் சொல்லி அரசியல் செய்ய முடியாது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் எச்.ராஜா போன்றோரை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.
இது தொடர்பில் தொல் திருமாவளவன் அவர்கள் கூறியதாவது...
சாதிய அடிப்படையில் முரண்பாடுகளை தோற்று வித்து மோதல்களை உருவாக்குவது சங் பரிவார்களின் திட்டம். இங்கே அவர்களால் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்பி ராமர் பெயரை சொல்லி சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்து ஆதாயம் தேட முடியாது.
அவர்கள் நினைப்பது போல் இங்கு சிறுபான்மையினர் கணிசமான அளவு இல்லை. அதேபோல இங்கு ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது. ஆகவே, அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் சாதியின் பெயரால் வன்முறையை தூண்டுவதுதான்.
அம்பேத்கர் பெரியாரைப் பிடித்தவர்கள் சாதி அரசியலை பேச மாட்டார்கள். ஆன்மீக சொற்பொழிவாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதே போல் எச். ராஜா போன்ற வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பேசுவோர்களை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.