இந்தியா: தமிழ்நாடு
தன்னை சின்னப் பையன் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம் என்றும் விஜயகாந்த் மகனால் என்ன செய்துவிட முடியும் என யாரும் கணக்கு போட்டுவிட வேண்டாம் எனவும் விஜயபிரபாகரன் ஆவேசம் காட்டியுள்ளார்.
தேமுதிகவை தொடங்குவதற்கு முன்னால் தங்களிடம் எவ்வளவு சொத்து இருந்தது, இப்போது தங்களிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை பகிரங்கமாக வெளியிடத் தயார் என்றும் விஜயபிரபாகரன் பேசியிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கியதன் மூலம் சொந்த சொத்தை விற்று செலவு செய்து வருவதை சுட்டிக்காட்டினார்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக முன்கூட்டியே பேசினால், வேறுவழியில்லாமல் நம்மிடம் ஓடி வருகிறார்கள் என்றும் கடைசியில் பேசினால் பேரம் பேசுகிறார்கள் எனவும் தங்களை விமர்சிக்கிறார்கள் என்றும் ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்மானத்தோடு கட்சியை வழிநடத்தி வருவதாக தெரிவித்தார்.
விஜயகாந்த் வீட்டில் இருப்பதால் தேமுதிக தேய்ந்துவிட்டதாக யாரும் நினைத்துவிட வேண்டாம் என்றும் 100 வருடம் அல்ல 200 வருடம் அல்ல 500 வருடமானாலும் தேமுதிக இயங்கும் என சூளுரைத்தார். ஊழல் செய்த திமுக, அதிமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் போது எந்த தவறும் செய்யாத தேமுதிக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என வினவினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய பிரபாகரனின் பேச்சு சலசலப்பை உருவாக்கியுள்ளது. திமுக, அதிமுக இல்லாமல் வேறு எந்தக் கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.