இந்தியா: தமிழ்நாடு
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளியான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது, பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளியான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு இத்தனை சிரமங்களை ஏற்படுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், தமிழக அரசு அதனை கண்காணித்து உறுதி செய்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இருதரப்பும் தங்கள் கடமைகளில் இருந்து தவறியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு சட்டம், தங்களை சாராதவர்களுக்கு ஒரு சட்டம் என பாகுபாட்டுடன் செயல்படுவதாகவும், குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களை கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.