ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம் தமது மன்னிப்பை கோரியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் முன்கொரணப்பட்ட இந்த திட்டம், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டது.

 இந்தநிலையில் டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு பாரிய திட்டங்களை உடன்பாடு இன்றி நிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதேவேளை டோக்கியோவில் நடைபெற்ற மற்றுமொரு சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய நிதியமைச்சரை சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடினார்

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார்.