இந்தியா: தமிழ்நாடு

தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களில் ஒன்று பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு. சங்க கால தமிழர்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஏறுதழுவல் பண்பாடு இருந்தது.

அதன் நீட்சியாகவே ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் இன்றும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்  பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தமிழர் பண்பாட்டை அழித்தொழிக்க தடை விதித்தது.

இத்தடையை உடைக்க 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டு பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உலகையே அதிரவைத்த மாபெரும் அமைதிப் புரட்சியை நடத்தினர். சென்னை மெரினாவில் தொடங்கிய இந்த புரட்சி இரவும் பகலுமாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குக்கிராமங்களையும் உலுக்கி எடுத்தது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் தமிழர் புரட்சியை திரும்பிப் பார்த்தது.

இதனையடுத்தே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் தடை இல்லாமல் நடத்துவதற்கு ஏதுவாக புதிய சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதனடிப்படையில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டும் வருகின்றன.

ஆனால் தமிழின விரோதிகள், இந்த புதிய சட்டத்துக்கும் தடை கேட்டனர்.

தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கும் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கும் தடை கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குப் போனது பீட்டா.

இவ்வழக்கை நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன் பெஞ்ச் விசாரித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் செல்லுபடியாகும் எனவும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடை எதுவும் இல்லை எனவும் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது.

தமிழர் விரோத பீட்டாவின் முகத்தில் கரியைப் பூசிவிட்டது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்துவிட்டார்.‌ தமிழ்நாடு அரசின் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது இல்லை; இது கலாசார பிரதிபதிலிப்பு என்கிற அரசின் வாதத்துக்குள் தலையிட முடியாது என்றெல்லாம் ஆணித்தரமாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்துவிட்டனர்.

அன்று மெரினாவில் தொடங்கிய யுத்தம் இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பால் நிரந்தரமாக முடிவுக்கு வந்துவிட்டது.