இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் மேகனின் தாயும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மூவரும் காரில் திரும்பினர். அப்போது அவர்களை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான புகைப்படக்காரர்கள் கார்களில் துரத்தினர்.

சுமார் 10 கார்களில் புகைப்படக்காரர்கள் துரத்தியதாகவும், 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த துரத்தலால் சாலையில் பல வாகனங்கள் விபத்தில் சிக்க இருந்ததாகவும் இளவரசர் தம்பதியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் எனவும் அவர் கூறினார்.

இளவரசர் ஹாரி காரில் துரத்தப்பட்ட சம்பவம் 1997 ஆம் ஆண்டு இளவரசி டயானாவின் உயிரை பறித்த சம்பவத்தை நினைவுப்படுத்தியுள்ளது.

வேல்ஸ் இளவரசியான டயானா 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பாரிஸ் நகரில் பாதுகாவலர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது புகைப்படக்காரர்கள் அவரை போட்டோ எடுக்க காரில் துரத்தியதால் பாரிஸில் அவரது கார் விபத்துக்குள்ளானது.

இதில் இளவரசர் ஹாரியின் தாயும் வேல்ஸ் இளவரசியுமான டயானாவும் அகால மரணமடைந்தனர்.

மேலும் டோடி ஃபயீத் என்ற எகிப்து திரைப்பட தயாரிப்பாளரும் இந்த விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.