இந்தியா: தமிழ்நாடு

கள்ளச்சாராயம் குடித்ததால் குடல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமியை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்வதற்காக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்குள் சென்றவுடன் அவருடன் ஆர்வக்கோளாறில் கட்சிக்காரர்களும் உள்ளே நுழைந்தனர். அதுமட்டுமல்ல அவரையே நெருக்கும் வகையில் அங்கே தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

கட்சிக்காரர்களை வெளியேற்ற முயன்றும் பலரும் பிடிவாதம் பிடித்ததால், டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட முயன்றார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, முக்கிய நிர்வாகிகளை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி கோபித்துக் கொண்டு புறப்படவிருந்தது மரகதம் குமரவேலுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், அவர் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி அங்கிருந்த நோயாளிகளை நலம் விசாரித்துவிட்டு புறப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டார்.