இங்கிலாந்தில் வாழும் இலங்கை தொழில் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா லைகா மொபைல் என்ற தொலை தொடர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். உலகம் முழுக்க 17 நாடுகளில் இந்த நிறுவனம் செல்போன் சேவை இணைப்பு வழங்கி வருகிறது. 

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா (Lyca) பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்

கோலிவுட்டின் தயாரிப்பு நிறுவனங்களில் இப்போது முன்னணியில் இருப்பதும் லைகா நிறுவனம் தான்.

இந்நிறுவனம் விஜய்யின் கத்தி படத்தை முறையாக தயாரித்ததன் மூலம் பிரபலமடைந்தது. அதேசமயம் லைகா நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்‌ஷவுடன் அந்த நிறுவனம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டதால் அந்த எதிர்ப்பு எழுந்தது.

கத்தி படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம், 2.0 போன்ற பல படங்களை தயாரித்தது. இந்தச் சூழலில் எம்ஜிஆர், கமல் ஹாசன் ஆகியோர் முயன்று முடியாத பொன்னியின் செல்வனை மணிரத்னம் இயக்கத்தில் தயாரித்தது லைகா நிறுவனம்.

இந்நிலையில், சென்னையில் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை சோதனை நடத்தினர்.

தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

எந்தப் புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அமலாக்கத்துறையினரின் அறிக்கையை பொறுத்து அது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது