இந்தியா: தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மே 7,8,9 ஆகிய மூன்று நாட்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, காஞ்சிபும் வடக்கு மாவட்டம், கண்டோன் மெண்ட் பல்லாவரத்தில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "திராவிட மாடல் நிர்வாகம் என்பது ஓர் வெற்று அரசியல் முழக்கம். திராவிடம் என்ற காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்" என்று விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மாண்புமிகு ஆளுநருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல. சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் காலாவதியாக்கியதுதான் திராவிடம்.

அந்நிய படையெடுப்பாக இருந்தாலும், ஆரிய படையெடுப்புகளாக இருந்தாலும், அதனை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். அதனால்தான் திராவிடத்தைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.